தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி திமுக அரசு தொழிலாளர்களின் 12 மணி நேர வேலை மசோதா சட்டத்தை நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்த மசோதாவை எந்த வகையிலும் ஏற்க முடியாது. 150 வருடங்களுக்கு மேலாக போராடி வென்ற தொழிலாளர்களின் உரிமையை தமிழ்நாடு அரசாங்கம் நெகிழ்வுத்தன்மை என்று அதை இல்லாமல் செய்வது தவறான நடவடிக்கை. இந்தியாவில் இந்த மசோதாவை பாஜக அல்லாத ஒரு மாநில அரசு கொண்டு வந்திருப்பது தமிழ்நாடு தான் முதல் முறை. 2020-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு வேலை நேரத்தை அதிகரிக்க முயற்சித்த போது அதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்தது.

இதேபோன்று ஒன்றிய அரசு பாஜக ஆளும் மாநிலங்களான உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றியதற்கும் திமுக கடும் கண்டனம் தெரிவித்தது. தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் தொழிலாளர்களின் வேலை நேரம் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும் என கலைஞர் கூட கருத்து தெரிவித்திருந்தார். தொழிலாளர்களின் நலனுக்கும் நியாயங்களுக்கும் புறம்பாக இந்த மசோதா இருக்கிறது. இந்த மசோதா சட்டமாகாமல் கைவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு நாங்கள் உறுதியாக தொடர்ச்சியாக போராடும் அனைத்து ஜனநாயக சக்திகளும் அனைத்து வகைகளிலும் போராடுவதோடு ஒன்றுபட்டு வெற்றி பெறும் வரை போராட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.