திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே லதா (வயது 45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், குழந்தைகள் இல்லாத காரணத்தினால் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

கடந்த 22-ஆம் தேதி லதாவின் வீட்டில் இருந்து திடீரெனக் கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள்  காவல்துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் வீட்டின் வெளிப்புறப் பூட்டுப் போட்டிருப்பதைக் கண்டு சந்தேகமடைந்து, பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது லதா உடல் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த முனிவேல் (65) என்பவர்தான் இந்தக் கொலையைச் செய்துள்ளார் என்பதைக் கண்டுபிடித்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

லதாவுக்கும் முனிவேலுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாகக் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று ( கடந்த 20-ஆம் தேதி) லதா வேலை முடிந்து வீடு திரும்பியபோது அங்கே சென்ற முனிவேலிடம், “எனக்கு வயது ஆகிவிட்டது, இனிமேல் நாம் இந்தக் கள்ளத்தொடர்பில் இருக்க வேண்டாம்; இத்துடன் முடித்துக் கொள்ளலாம்” என்று லதா திட்டவட்டமாகத் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றவே ஆத்திரமடைந்த முனிவேல் லதாவைத் தாக்க முயன்றுள்ளார். அப்போது லதா அவரைத் தள்ளிவிட்டுள்ளார். பின்னர், லதா தரையில் தூங்கிக் கொண்டிருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட முனிவேல், சமையலறை அருகில் கிடந்த இரும்புச் சுத்தியலை எடுத்து அவரது தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த லதா, மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்துயிரிழந்தார். தனது கொடூரச் செயலை மறைப்பதற்காக வீட்டை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு முனிவேல் தப்பியோடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து,  போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கைதான முனிவேலைச் சிறையில் அடைத்தனர். கள்ளத்தொடர்பை முறித்த பெண்ணை முதியவர் சுத்தியலால் அடித்துக் கொன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.