உத்தரப்பிரதேச மாநிலம் ஜாலான் மாவட்டத்தின் கொச் பகுதியில் குடிகாரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்க அப்பகுதி மக்கள் அவசர உதவி எண்ணான 112-க்கு அழைப்பு விடுத்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரைக் கண்டு பொதுமக்கள் நிம்மதியடைவதற்குள், அங்கு ஒரு வினோதமான சூழல் நிலவியது.

மேலும் சண்டையை நிறுத்த வந்த இரண்டு போலீசாரும் பொதுமக்களுக்கே சவால் விடும் வகையில் மிக மோசமான போதையில் இருந்தனர். அவர்கள் தார்மீகப் பொறுப்பின்றி தடுமாறி நின்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், இது குறித்து கேள்வி எழுப்பியபோது அவர்களுடன் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“>

இதனால் நிலைமை கைமீறிப் போவதைக் கண்ட பொதுமக்கள், போதையில் இருந்த போலீசாரின் செயல்பாடுகளைத் தங்கள் செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கினர். இந்த வீடியோ மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் கடமை தவறி குடிபோதையில் பொதுமக்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட அந்த இரண்டு போலீசாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பாதுகாப்பிற்கு வர வேண்டிய காவலர்களே போதையில் ரகளையில் ஈடுபட்ட இந்தச் சம்பவம் உபி காவல்துறையினருக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.