டெல்லியில் சிறப்பு அதிரடிப் படை பிரிவில் கமாண்டோவாகப் பணியாற்றி வந்த காஜல் என்ற பெண், அவரது கணவராலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஜலின் கணவர் இந்தத் துயரச் சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பாக, காஜலின் சகோதரரைத் தொலைபேசியில் அழைத்து, “நான் உன் தங்கையைக் கொல்லப் போகிறேன்” என்று வெளிப்படையாக மிரட்டல் விடுத்தது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் குடும்பத் தகராறு காரணமாக இந்த மிரட்டலை விடுத்த சில நிமிடங்களிலேயே, ஆத்திரமடைந்த அவர் காஜலைத் தாக்கி கொலை செய்துள்ளார். பாதுகாப்புப் படையில் பணியாற்றி நாட்டுக்கே பெருமை சேர்த்த ஒரு பெண், தனது சொந்த வீட்டிலேயே கணவனால் அச்சுறுத்தப்பட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  காஜலின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் அந்தத் தொலைபேசி உரையாடல் மற்றும் இதர ஆதாரங்களைச் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

“>

இந்நிலையில் ஒரு கமாண்டோவாகப் பயிற்சி பெற்ற வீராங்கனைக்கே இத்தகைய நிலை ஏற்பட்டது, குடும்ப வன்முறையின் தீவிரத்தையும் அதன் கோர முகத்தையும் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. கொலையாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.