மறைந்த மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவாரின் உடல், அவரே வழங்கிய புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அங்கிருந்தோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சுமார் 6 மாதங்களுக்கு முன்பு, மகாராஷ்டிராவின் பாராமதி நகராட்சியில் மிகவும் பழுதடைந்த நிலையில் பழைய ஆம்புலன்ஸ் ஒன்று பயன்பாட்டில் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதனை அறிந்த அஜித் பவார், உடனடியாகத் தனது பாராமதி தொகுதிக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கித் தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டுநரிடம் ஒப்படைத்த அஜித் பவார், “மக்களுக்குப் பணியாற்றும் போது நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டும்” என்று அறிவுரை வழங்கியுள்ளார். இந்நிலையில், அஜித் பவாரின் மறைவுக்குப் பிறகு அவரது உடல் மருத்துவமனையிலிருந்து இறுதிச் சடங்கிற்காக அதே ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கண்ணீர் மல்கக் கூறுகையில்,
“மக்களுக்காக அவர் நேர்மையாகச் செயல்படச் சொல்லி என்னிடம் ஒப்படைத்த அதே வாகனத்தில், இன்று அவரது உடலையே கடைசிப் பயணமாக ஏற்றிச் செல்வேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை,” எனத் தனது உருக்கமான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். மேலும் விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
