மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், பள்ளிச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியை, வழக்கறிஞர்கள் திரண்டு வந்து நீதிமன்ற வளாகத்திலேயே சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போபாலைச் சேர்ந்த ஒசாஃப் அலி கான் என்பவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ஆம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதுமட்டுமின்றி, அந்தச் செயலை வீடியோ எடுத்துச் சிறுமியை மிரட்டி (பிளாக்மெயில்) வந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை போபால் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ஒசாஃப் அலி கானைக் காவல்துறையினர் நேற்று பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். அப்போது, அங்கு ஏற்கனவே திரண்டிருந்த ஏராளமான வழக்கறிஞர்கள், சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையால் ஆத்திரமடைந்து அலி கானைச் சூழ்ந்துகொண்டனர்.
Bhopal, Madhya Pradesh: In court, lawyers attacked the accused of raping an 11th-grade student, who was brought by police and taken on a two day remand. The accused had allegedly blackmailed the victim using religious conversion and a video.
(Source: Police Department) pic.twitter.com/BENt5sE4kD
— IANS (@ians_india) February 3, 2026
காவல்துறையினரின் பாதுகாப்பையும் மீறி, குற்றவாளியை வழக்கறிஞர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. குற்றவாளியை மீட்க முயன்ற போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்து, அலி கானைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
மேலும் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு குற்றவாளியைத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இச்சம்பவம் காரணமாகப் போபால் நீதிமன்றப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
