குடும்பத் தகராறில் ஒரு சிறிய வாக்குவாதம் கொலையில் முடிந்திருப்பது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மாமனாரை மிகக் கொடூரமான முறையில் மருமகள் தாக்கிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாகத் தகராறு நீடித்து வந்துள்ளது. இதனால் கணவரைப் பிரிந்த அந்தப் பெண் தனியாக வசித்து வந்தார். இவர்களது இரண்டு குழந்தைகளும் மாமனார் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். மாமனார் மாற்றுத்திறனாளியாக இருந்தபோதிலும், பேரன் பேத்திகளைத் தனது பொறுப்பில் வளர்த்து வந்தார்.

கடந்த புதன்கிழமை, திடீரென மாமனார் வீட்டிற்கு வந்த மருமகள், தனது குழந்தைகளைத் தன்னுடன் அழைத்துச் செல்லப் போவதாகக் கூறி பிடிவாதம் பிடித்தார். “குழந்தைகள் என்னுடன் இருப்பதுதான் பாதுகாப்பு” என்று மாமனார் அதற்கு முட்டுக்கட்டைப் போட்டார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மருமகள் மாமனார் மீது தாக்குதல் நடத்தினார்.

மாற்றுத்திறனாளியான மாமனாரால் மருமகளின் ஆக்ரோஷமான தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியவில்லை. வீட்டில் கிடந்த ஒரு செங்கலை எடுத்த மருமகள், மாமனாரின் ஆணுறுப்புப் பகுதியில் மீண்டும் மீண்டும் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் துடித்த அவர், அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற அந்தப் பெண்ணைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தற்போது அவரைக் கைது செய்துள்ளனர். போலீஸ் விசாரணையில், “குழந்தைகளைத் தர மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த விபரீத முடிவை எடுத்தேன்” என அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.