மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பாஜக மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுராக் தாகூர் அணிந்திருந்த விலையுயர்ந்த வெளிநாட்டு பிராண்ட் பெல்ட், சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று அமளி நிலவியபோது, உரையாற்றுவதற்காக அனுராக் தாகூர் எழுந்து நின்றார். அப்போது அவர் அணிந்திருந்த ‘லூயி விட்டான்’ (Louis Vuitton) என்ற உலகப் புகழ்பெற்ற பிராண்டின் பெல்ட் கேமராவில் தெளிவாகத் தெரிந்தது. அந்த பெல்ட்டில் உள்ள ‘LV’ என்ற சின்னம் வைரலான வீடியோவில் வெளிப்படையாகத் தெரிகிறது.
संसद में स्वदेशी पर भाषण चल रहा था और अनुराग ठाकुर का LV वाला बेल्ट दिख गया 🤭
ज़्यादा नहीं 1-1.5 लाख के बीच का होगा 🤡 pic.twitter.com/rCEEjv8dV6
— RAJSHEKHAR VERMA (@shekhar_br02) February 3, 2026
தனது பெல்ட் கேமராவில் தெரிவதை உணர்ந்த அனுராக் தாகூர், அடுத்த சில நொடிகளில் இருக்கையில் அமர்ந்தார். பின்னர் மீண்டும் உரையாற்ற எழுந்தபோது, தனது கோட் (Coat) மூலம் அந்த பெல்ட் தெரியாதவாறு கவனமாக மறைக்க முயன்றார். இருப்பினும், அதற்குள் அந்த காட்சிகள் பதிவாகி இணையதளங்களில் பரவத் தொடங்கின.
சர்வதேச சந்தையில் லூயி விட்டான் பிராண்ட் பெல்ட்கள் குறைந்தபட்சம் 40,000 ரூபாயிலிருந்து விற்பனை செய்யப்படுகின்றன. அனுராக் தாகூர் அணிந்திருந்தது போன்ற குறிப்பிட்ட ரகங்கள் 80,000 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்று சமூக வலைதளவாசிகள் மதிப்பீடு செய்து கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் எளிய மக்களின் பிரச்சினைகள் மற்றும் பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெற்று வரும் வேளையில், ஒரு மூத்த தலைவர் இவ்வளவு விலையுயர்ந்த வெளிநாட்டு பிராண்ட் பெல்ட்டை அணிந்திருந்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் எதிர்க்கட்சியினரும் இணையவாசிகளும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
