பெங்களூருவைச் சேர்ந்த தம்பதியினர் இலங்கையின் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியை நீந்திக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளனர். சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வரும் டேனிசன் மற்றும் விருஷாலி ஆகிய இருவரும், சுமார் 28 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்தப் பரப்பை 11 மணி நேரம் 15 நிமிடங்களில் கடந்து அசத்தியுள்ளனர்.
மேலும் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தலைமன்னாரில் இருந்து தங்கள் பயணத்தைத் தொடங்கிய இவர்கள், பிற்பகல் 3.15 மணியளவில் தனுஷ்கோடியின் அரிச்சல்முனை பகுதியை வந்தடைந்தனர். இதன் மூலம் தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே ஜோடியாக நீந்திச் சாதனை படைத்த முதல் தம்பதி என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.
இந்தச் சாதனைப் பயணத்தின் போது கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று போன்ற சவால்களை எதிர்கொண்டதாக அந்தத் தம்பதியினர் தெரிவித்துள்ளனர். கடலில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் திட்டமிட்ட நேரத்தை விட ஒரு மணி நேரம் கூடுதலாக எடுத்துக்கொண்ட போதிலும், தங்களின் இலக்கை வெற்றிகரமாக அடைந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.
