இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரைத் தொடர்ந்து, ஒருநாள் தொடரையும் 1-2 என இழந்து இந்திய அணி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற தொடரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டியில், இங்கிலாந்து நிர்ணயித்த 388 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கித் துரத்திய இந்தியா, 360 ரன்கள் வரை எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ரோஹித் சர்மா (138), விராட் கோலி (74) ஆகியோர் சிறப்பாகப் போராடியபோதிலும் அணியை வெற்றியடையச் செய்ய முடியவில்லை.

இத்தோல்வி குறித்துப் போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணித் தலைவர் சுப்மன் கில், வீரர்களின் உடல்தகுதி குறித்துத் தனது கடும் கவலையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். “இங்கிலாந்து தொடருக்காகத் தேர்வு செய்யப்பட்ட முதன்மை அணியில் இருந்து கிட்டத்தட்ட 5 முக்கிய வீரர்கள் காயத்தால் விளையாட முடியாமல் போனது. தொடர் தொடங்கும் முன்பே ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி காயமடைந்தனர். அடுத்து வந்த ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தரும் காயமடைந்தது அணித் திட்டத்தையே தலைகீழாக மாற்றிவிட்டது என்று ஆதங்கப்பட்டார்.

தொடர்ந்து பேசிய கில், “நாம் அடுத்து உலகக்கோப்பை தொடரை இலக்காகக் கொண்டுள்ளோம். அங்குத் தொடர்ந்து 11 போட்டிகளில் விளையாட வேண்டி இருக்கும். ஆனால், இங்கே நமது வீரர்கள் 2 அல்லது 3 போட்டிகள் கொண்ட தொடரைக் கூட முழுமையாக விளையாட முடியாமல் சிறிய காயங்களால் வெளியேறுகிறார்கள். 80% உடல்தகுதியுடன் இருக்கும் ஒரு வீரரை ஆபத்தை உணர்ந்து அணியில் சேர்க்க முடியாது. அது போட்டியின் நடுவில் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றால், அனைத்து வீரர்களும் தங்களின் உடல்தகுதியை உடனடியாக மேம்படுத்தியே ஆக வேண்டும்” என எச்சரிக்கை விடுத்தார்.

போட்டியின் தோல்விக்கான காரணத்தைக் குறிப்பிட்ட கில், “குறிப்பாக பவர்-பிளே ஓவர்களில் எங்கள் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. அதிக அளவில் லூஸ் பால்களை வீசியதால் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். கடைசி ஓவர்களில் மட்டும் 63 ரன்களை விட்டுக்கொடுத்தோம். 340 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டிய இலக்கு 390-ஐ நெருங்கியது. எந்தவொரு ஆடுகளத்திலும் 390 ரன்களைத் துரத்துவது எளிதல்ல” என்று சுட்டிக்காட்டினார். இத்தொடரில் கில் கூட தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டது குறிப்பிடத்தக்கது.