தமிழ்நாடு அரசின் சுகாதாரத் திட்டத்தின்கீழ் இயங்கும் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மருத்துவம், காவல், தீயணைப்புத் துறைகளுடன் இணைந்து 24 மணி நேரமும் பொதுமக்களுக்காக தயார் நிலையில் உள்ள இச்சேவை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 521 ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆயத்தமாக வைத்துள்ளது.

ஆபத்து ஏற்படக்கூடிய இடங்களில் வாகனங்கள் முன்கூட்டியே நிறுத்தப்பட்டுள்ளன. சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்களும், ஓட்டுநர்களும் தயாராக உள்ளனர். அனைத்து ஆம்புலன்ஸ்களிலும் தீயணைப்பு உபகரணங்கள், மீட்புக் கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், அவசர மருந்துகள் போதிய அளவில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

பண்டிகை காலத்தில் தீ விபத்து அல்லது வேறு அவசர உதவி தேவைப்பட்டால், 108 என்ற ஒற்றை எண்ணை அழைத்தால் போதும்; உடனடியாக அருகிலுள்ள சேவை மையத்துக்கு தகவல் சென்று விரைந்து உதவி கிடைக்கும். இலவச ஆம்புலன்ஸ்களில் தீக்காயங்களுக்கான சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அடர்த்தியான குடியிருப்புகள் மற்றும் குறுகிய சாலைகளில் விரைவாகச் செயல்பட 108 பைக் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படும். மாவட்ட கள செயல்பாட்டுக் குழுவினர் அனைத்துத் துறைகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவர். சென்னையில் அழைப்பு வந்த 5 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்தை அடையும்; பிற மாவட்டங்களில் 5 முதல் 9 நிமிடங்களுக்குள் சென்றுவிடும்.