தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, ஆட்சியமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு (பெரும்பான்மை) தவெகவிடம் தற்போது இல்லை என்பதை ஆளுநர் விஜயிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி பலத்தை நிரூபிப்பதில் சிக்கல் நீடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆதரவு அளித்த பின்பும், 108 இடங்களில் வென்றுள்ள தவெகவிற்கு இன்னும் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் சூழல் உள்ளது. இதனால் சட்ட நிபுணர்களின் கருத்தைக் கேட்ட பின்பே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்தாலும், ஆளுநரின் இந்தத் தடையால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பும் சஸ்பென்ஸும் நிலவி வருகிறது.
