
இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படுகிறது. இது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வேலை திட்டத்தில் உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தினசரி ஊதியத்தை தற்போது மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி 2023-24 ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு தொடர்பான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வருகிறது.
ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஊதியத்திலிருந்து 7 ரூபாய் முதல் 26 ரூபாய் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாநிலங்களுக்கு ஏற்றவாறு ஊழிய தொகை மாறுபடும். தமிழகத்தில் 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 281 ரூபாய் தினசரி ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 294 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 5 கோடியே 97 லட்சம் குடும்பங்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கிறது.