காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் பிறகு நாடாளுமன்ற மக்களவை செயலகம் எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தியை நீக்கியுள்ளது. இதனால் அடுத்த 8 வருடங்களுக்கு ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை நிலவுகிறது. ஒன்றிய அரசின் இந்த செயல்பாடுகளை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் டெல்லி ராஜ்காட் வெளியே பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்கே ஆகியோர் தலைமையில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வதற்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.‌ இதுகுறித்து பிரியங்கா காந்தி பேசியதாவது, தியாகி மகனான என் சகோதரன் ராகுல் காந்தியை துரோகி, மீர் ஜாபர் என்று கூறுகிறார்கள். அவரது தாயை அவமதிக்கிறார்கள். என் குடும்பத்தை தினமும் அவமதிக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் அவதூறு வழக்கு பதிவு செய்யப்படவில்லை. என் சகோதரன் ராகுல் காந்தியை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார். அவர் ஒரு கோழை. இதை நான் திரும்பத் திரும்ப சொல்வேன். இதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப் போகிறீர்களா?. என்னை சிறைக்கு அனுப்ப போகிறீர்களா?. வாருங்கள் நான் எதற்கும் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.