உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், நீண்ட கால நட்பையும் நம்பிக்கையையும் சிதைக்கும் வகையில், 14 வயது சிறுவன் ஒருவன் அவனது தாயின் தோழியாலேயே ஆற்றில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அன்சுமன் என்ற 14 வயது சிறுவன் கடந்த மே 1-ஆம் தேதி திடீரென காணாமல் போனான். இது குறித்துக் காவல் துறையினர் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, அந்த சிறுவனைப் ‘பூஜை’ என்ற பெண் தனது ஸ்கூட்டரில்அழைத்துச் சென்றது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட பூஜை அளித்த வாக்குமூலத்தின்படி, அவருக்கும் சிறுவனின் குடும்பத்தாருக்கும் இடையே ஒரு கடையை வாங்குவது தொடர்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பணத் தகராறு இருந்து வந்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளாக அந்த குடும்பத்திற்கு நெருங்கிய தோழியாக இருந்த போதிலும், பணப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் சிறுவனைப் பழிவாங்கத் துணிந்துள்ளார்.
சிறுவனை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற பூஜை, அம்பாலா-சர்சாவா சாலையில் உள்ள பெரிய கால்வாய் ஆற்றில் சிறுவனைத் தள்ளிவிட்டதாக ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, 17 பேர் கொண்ட குழு (Divers) சுமார் 17 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை சிறுவனின் உடலை மீட்டனர்.
குற்றத்தைச் செய்த பிறகு, காவல்துறையினரைத் திசைதிருப்புவதற்காகப் பூஜை பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகளில் அவர் ஹசன்பூர் சுங்கி மற்றும் சர்சாவா சுங்கச்சாவடி வழியாகச் சென்றது உறுதி செய்யப்பட்டது. காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சிறுவனின் உயிரிழப்பால் அந்தப் பகுதியில் பதற்றமும் சோகமும் நிலவுகிறது. குற்றவாளி பூஜைக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
