இந்தியாவின் மிகத் தூய்மையான நகரம் எனப் புகழப்படும் இந்தூரில், கழிவுநீர் கலந்த குடிநீரைப் பருகியதால் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்துக் கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் மத்தியப் பிரதேச அமைச்சர் கைலாஷ் விஜயவர்க்கியா மிகவும் அலட்சியமாக நடந்துகொண்டது சர்ச்சையை அதிகமாக்கியுள்ளது.
“வீணான கேள்விகளைக் கேட்காதீர்கள்” என ஹிந்தியில் கூறியதுடன், “கண்டா” (பயனற்றது/குப்பை) என்ற அநாகரீகமான சொல்லையும் பயன்படுத்தியுள்ளார். மக்களின் உயிரைப் பறித்த ஒரு தீவிரமான விவகாரத்தைப் பற்றிப் பேசும்போது, ஒரு பொறுப்புள்ள அமைச்சரே இப்படிப் பேசியது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமைச்சரின் இந்தப் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அவர் தற்போது தனது எக்ஸ் (X) தளத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.
देश के सबसे साफ शहर में गंदा पानी पीने से 10 से ज्यादा लोगों की मौत हो चुकी है जिस शख्स पर लोगों को साफ पानी पिलाने का जिम्मा है वो सवालों को फोकट बता रहे हैं हमारे सवालों को "घंटे" में उड़ा रहे हैं @manishdekoder @GargiRawat @Abhinav_Pan @sanket pic.twitter.com/5iIF2AiFZ7
— Anurag Dwary (@Anurag_Dwary) December 31, 2025
கடந்த இரண்டு நாட்களாகத் தூக்கமின்றித் துயரமான சூழலில் பணியாற்றி வருவதால், தற்செயலாகத் தவறான வார்த்தைகள் வந்துவிட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மக்கள் முழுமையாகப் பாதுகாப்பாக இருக்கும் வரை தான் ஓயப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், பத்து உயிர்கள் பறிபோனதை ஒரு சாதாரண விஷயமாகக் கருதி அவர் பேசிய விதம், சமூக வலைத்தளங்களில் இன்னும் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
