சூஸ் என்ற 41 வயதுப் பெண்மணி, தனது வயிற்றில் இருந்த சுமார் 10 கிலோ எடையுள்ள ஒரு பெரிய கட்டியை அகற்ற அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வழக்கமானச் சோதனையின்போது அவருக்கு கர்ப்பம் தரித்திருப்பது உறுதியாகி, மருத்துவர்களையும் சூஸையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
பல வருடங்களாகக் குழந்தைக்காக முயன்று, கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் காத்திருந்த நிலையில், வயிற்றில் இருந்த கட்டியே தனக்குக் கருத்தரிக்கத் தடையாக இருப்பதாக அவர் நம்பினார்.
கடும் வயிற்று வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, மருத்துவர்கள் அதிர்ச்சியூட்டும் உண்மையைக் கண்டறிந்தனர். சூஸுக்கு அபூர்வமான வயிற்றுக்குழிக் கர்ப்பம் (Abdominal Ectopic Pregnancy) இருந்தது. இம்முறையில், கருப்பை காலியாக இருந்த நிலையில், முழு வளர்ச்சியடைந்தக் குழந்தை அவரது ஈரலுக்கு அருகிலேயே வளர்ந்து வந்தது.
இது மருத்துவ அதிசயமான நிகழ்வு. ஏனெனில், இது போன்ற கர்ப்பங்களில், இரத்தம் அதிகமாய் வெளியேறிப் பெரும்பாலும் குழந்தையை இழக்க நேரிடும்.
இருப்பினும், இந்த அரிய தருணத்தைக் கையாள 30 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு வரவழைக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின் மூலம், ரியு என்ற பெயரிடப்பட்ட 8 பவுண்டுகள் எடையுள்ள ஆரோக்கியமான ஆண் குழந்தையை அவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். பிரசவத்திற்குப் பிறகுத் தாய்க்கு அதிக இரத்தம் வெளியேறியபோதும், மருத்துவர்கள் சூஸின் உயிரையும் காப்பாற்றினர்.
