சீனாவில் உயர்தரப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், இரவு பத்து மணி வரை வகுப்பறைகளில் படிக்கும் காணொலிச் சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சாங்ஷா நகரில் உள்ள இந்த உயர்நிலைப் பள்ளி, முக்கியமான ‘காகாவோ’ தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக காலை ஏழு மணி முதல் இரவு பத்தரை மணி வரை வகுப்புகளை நடத்துகிறது.

சமூக வலைதளங்களில் காணொலியைப் பகிர்ந்த ஆலன் ஃபூ என்ற வலைப்பதிவாளர், “சாங்ஷாவில் இரவு நேர வாழ்க்கைக்காக வாகனங்கள் இப்படிப் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தவில்லை; இது, மாணவர்கள் காக்காகோ தேர்வுக்கான தீவிரப் பயிற்சிக்குப் பிறகு வீட்டிற்குச் செல்வதற்காகக் காத்திருக்கும் பெற்றோரின் வாகனங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்த ஒற்றைத் தேர்வுக்குத் தயாராவதற்காக அதிகாலை ஏழு மணி முதல் இரவு வரை படிக்கிறார்கள் என்றும், சிலர் மதிய உணவு இடைவேளையின்போது கூடப் பள்ளியிலேயே தூங்கி ஓய்வெடுத்துவிட்டுத் தொடர்ந்து படிக்கிறார்கள் என்றும் ஃபூ தெரிவித்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Allen Fu (@allen.fu88)

இந்தக் ‘காகாவோ’ என்பது சீனாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்வதற்கான ஒரே அளவுகோலாக உள்ளது. சீன இலக்கியம், கணிதம் மற்றும் வெளிநாட்டு மொழி ஆகிய முக்கியப் பாடங்களுடன், மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரிவுக்கு ஏற்ப வரலாறு, அரசியல், புவியியல் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய கூடுதல் பாடங்களிலும் இத்தேர்வு நடத்தப்படுகிறது.

இவ்வளவு நீண்ட நேரப் பயிற்சி குறித்துக் கருத்துத் தெரிவித்த ஃபூ, “இந்தப் பணி நெறிமுறை, அர்ப்பணிப்பு மற்றும் உந்துதல் ஆகியவை ஆச்சரியமளிக்கின்றன. ஆனால், இதன் விலை என்ன? வெற்றி பெறுவதற்காக உங்கள் சுதந்திரத்தை நீங்கள் இழப்பீர்களா? எப்போது ஒரு லட்சியம் சோர்வாக மாறும்?” என்று கேள்விகளை எழுப்பி உள்ளார்.