திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காடு மற்றும் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் பகுதிகளில் வருடம் தோறும் ஏராளமான பறவைகள் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இங்கு வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் வனத்துறையினர் சார்பாக இந்த பகுதிகளில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் மாவட்ட வன அலுவலர் அறிவொளி போன்றோர் மேற்பார்வையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியுள்ளது.
இதில் முத்துப்பேட்டை வன சரக அலுவலர் ஜெனரி மற்றும் வனத்துறையினர், பறவைகள் ஆராய்ச்சியாளர் பாலச்சந்திரன் தலைமையிலான 10 குழுக்களாக பிரிந்து மொத்தம் 500 பேர் கொண்ட குழுவினர் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கணக்கெடுக்கு பணியில் மயிலாடுதுறை பகுதியில் உள்ள கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் மாணவர்கள் வனகுழு உறுப்பினர்கள் உயிர் பன்மை வேளாண்மை குழு உறுப்பினர்கள், வன பணியாளர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். அதேபோல் முத்துப்பேட்டை அலையாத்தி காடு பகுதிகளிலும், கோபாலசமுத்திரம் வயல்வெளி, கிழக்கு கடற்கரை சாலை, மங்களூர் ஏரி, தெண்டிய காடு பகுதி, மருதாங்கா வெளி, மரவாக்காடு, வடக்காடு, கரிக்காடு, துறை காடு போன்ற வனப்பகுதிகள், பரக்கலக்கோட்டை, அமிரி குளம் போன்ற 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுள்ளது.
