இந்திய ரயில்வே துறையில், குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் மொத்தம் 62,460 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் வேலை தேடுவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

வயதுவரம்பு

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயது முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி/எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

சம்பளம்

இந்தப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஆரம்ப அடிப்படைச் சம்பளமாக ரூ. 18,000 கிடைக்கும்.

கல்வித்தகுதி

​இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்சக் கல்வித் தகுதியாகச் சில பதவிகளுக்குப் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது பிற பதவிகளுக்குச் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் முதலில் கணினி வழித் தேர்வு (Computer Based Test) மற்றும் அதைத் தொடர்ந்து உடற்தகுதித் தேர்வு (Physical Efficiency Test) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கணினி வழித் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு 100 வினாக்களுடன் 90 நிமிடங்கள் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க விரும்புவோர், சம்பந்தப்பட்ட மண்டலத்தின் இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும் (எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250).