மனித வரலாற்றின் போக்கையே மாற்றியமைக்கக்கூடிய 1.5 லட்சம் ஆண்டுகள் பழமையான ராட்சத மனித மண்டை ஓடு ஒன்றை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு ‘டிராகன் மேன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மண்டை ஓடு, சாதாரண மனிதர்களை விட அளவில் பெரியதாகவும், பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டதாகவும் உள்ளது. கடந்த 1933-ஆம் ஆண்டே சீனாவின் ஹார்பின் நகரில், சோங்குவா ஆற்றங்கரையில் கட்டுமானப் பணியின் போது தொழிலாளி ஒருவரால் இது கண்டறியப்பட்டது.
அப்போது ஜப்பானிய ஆக்கிரமிப்பு காலம் என்பதால், அதைப் பாதுகாப்பாகத் தனது வீட்டுத் கிணற்றுக்குள் அந்தத் தொழிலாளி மறைத்து வைத்தார். பின்னர், கடந்த 2018-இல் அவரது குடும்பத்தினர் அதனை வெளியே எடுத்து, 2021-ஆம் ஆண்டில் விஞ்ஞானிகளிடம் ஒப்படைத்தனர். இதைப் பரிசோதித்த சீனா ஹெபெய் ஜியோ பல்கலைக்கழகப் பேராசிரியர் கியாங் ஜி தலைமையிலான குழுவினர், இதன் விசித்திரமான உண்மைகளைக் கண்டு வியந்து போயுள்ளனர்.
இந்த மண்டை ஓட்டின் மூளைத் திறன் நவீன மனிதர்களுக்கு இணையாக இருந்தாலும், இதன் கண்கள், தடித்த புருவங்கள் மற்றும் தாடைப் பகுதி மிகவும் வலுவாக உள்ளன. கடும் குளிரையும் தாங்கி வாழும் திறன் கொண்ட இந்த மனித இனத்திற்கு ‘ஹோமோ லாங்கி’ (Homo longi) என்று விஞ்ஞானிகள் முதலில் பெயரிட்டனர். ஆனால், தற்போதைய நவீன டிஎன்ஏ பரிசோதனையில், இது வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த ‘டெனிசோவன்’ (Denisovan) என்ற மர்மமான மனித இனத்தைச் சேர்ந்தது என்பது உறுதியாகியுள்ளது.
ஆப்பிரிக்காவில் இருந்துதான் நவீன மனிதர்கள் உலகெங்கும் பரவினார்கள் என்ற பொதுவான கருத்தை இந்த ஆய்வு மாற்றியமைத்துள்ளது. ஆசியாவிலும் 1.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பல மனித இனங்கள் வாழ்ந்துள்ளன என்பதும், அவர்களின் மரபணுக்கள் இன்றைய ஆசிய மக்களின் டிஎன்ஏ-வில் கலந்துள்ளன என்பதும் தெரியவந்துள்ளது. மனித பரிணாம வளர்ச்சியின் மிக முக்கிய கண்டுபிடிப்பாகக் கருதப்படும் இந்த டிராகன் மேன் குறித்து, விஞ்ஞானிகள் தொடர்ந்து தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
