மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே கடந்த 30 ஆண்டுகளாக தங்க நகைகளை உருக்கித் தரும் தொழில் செய்து வருபவர் சுஹாஷ். இந்தத் தொழிலில் நம்பிக்கை மிக முக்கியம் என்பதால், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை நம்பிக்கையான ஏஜென்ட் மூலம் கடந்த வாரம் வேலைக்கு எடுத்துள்ளார்.

சம்பவத்தன்று, நகைக்கடை ஒன்றிலிருந்து வந்த நகைகளை உருக்கி, சுமார் ஒன்றரை கிலோ எடையுள்ள தங்கப் பாராக மாற்றிய சுஹாஷ், அதன் எடையைத் துல்லியமாகப் பார்க்கச் சொல்லி அந்தச் சிறுவனிடம் கொடுத்துக் கடையின் முன்பகுதிக்கு அனுப்பியுள்ளார்.

கையில் கிடைத்த பெரும் தங்கத்தைப் பார்த்ததும் அந்தச் சிறுவனுக்குப் பேராசை ஏற்பட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் உழைப்பதைக் காட்டிலும், இந்தத் தங்கத்துடன் தப்பிச் சென்றால் செட்டிலாகிவிடலாம் என எண்ணிய அவன், செருப்பைக் கூடப் போடாமல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடினான்.

அதிர்ச்சியடைந்த சுஹாஷ் அவனைத் துரத்திச் சென்றும் பிடிக்க முடியவில்லை. உடனே அவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது.

இரயில் ஏறித் தனது சொந்த மாநிலத்திற்குத் தப்பிச் செல்லும் திட்டத்துடன் ரயில்வே நிலையத்திற்கு வந்த அந்தச் சிறுவன், மகிழ்ச்சியில் இந்திப் பாடல் பாடிக்கொண்டே உலாவியுள்ளான். அங்கு மறைந்திருந்த போலீசார் அவனை லாவகமாகப் பிடித்து, அவரிடமிருந்த ஒன்றரை கிலோ தங்க பாரையும் மீட்டனர்.

நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என நினைத்து வேலைக்குச் சேர்த்த சிறுவனே கைவரிசைக் காட்டிய இந்தச் சம்பவம், அப்பகுதி நகை வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.