2026 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன், முதல் 7 போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற அறிவிப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால், குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற கையோடு, தொடரின் பிற்பாதியில்தான் இந்தியா வருவேன் என்று அவர் கூறியிருப்பது பஞ்சாப் அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. பெர்குசனின் இந்த முடிவை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஒரு அணியுடன் ஒப்பந்தம் செய்த பிறகு, பாதியிலேயே விலகுவது தொழில்முறை கிரிக்கெட்டிற்கு அழகல்ல என்றும், பாதி போட்டிகளில் விளையாடிவிட்டு ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை மட்டும் பெற்றுச் செல்வது அணிக்கு எந்தப் பயனும் தராது என்றும் அவர் சாடியுள்ளார்.

பெர்குசன் அணிக்குத் திரும்பும் நேரத்தில் பஞ்சாப் அணியின் பிளேஆஃப் வாய்ப்பே பறிபோயிருக்கலாம் என அவர் ஆதங்கம் தெரிவித்துள்ள நிலையில், இது வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில்முறைக்கும் இடையிலான விவாதமாக மாறியுள்ளது.