கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகர் டுவைன் பிராவோ, ஐபிஎல் 19-வது சீசன் தொடங்குவதற்கு முன்பே மைக் ஆன் செய்யப்பட்டிருப்பதை அறியாமல் பேசிய சர்ச்சை பேச்சு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் தலைமைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் மற்றும் கேப்டன் ரஹானே முன்னிலையில், ஷேன் வாட்சனிடம் பேசிய பிராவோ, தனது வீட்டில் இளம் பெண்களுடன் இருந்ததாகக் குறிப்பிட்ட வார்த்தைகள் அப்படியே மைக்கில் பதிவாகியுள்ளன.
ரஹானே எச்சரித்தவுடன் அதிர்ச்சியடைந்த பிராவோ உடனடியாகப் பேச்சை நிறுத்தினாலும், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பிராவோவின் இந்தத் தரக்குறைவான பேச்சுக்கு இணையத்தில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஒரு தொழில்முறை இடத்தில் பொறுப்பான பதவியில் இருப்பவர், பெண்களைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமாகப் பேசுவது வெட்கக்கேடானது என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
முன்பு ஹர்திக் பாண்டியா இது போன்ற ஒரு விவகாரத்தில் சிக்கித் தண்டனை அனுபவித்ததைச் சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள், விளையாட்டு வீரர்கள் பொதுவெளியில் பேசும்போது கண்ணியத்துடன் இருக்க வேண்டும் எனத் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
