தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் கொல்லப்பள்ளி பகுதியில் மாணிக் ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இந்த கிராமத்தில் நாராயணன் ரெட்டி மற்றும் அஞ்சி ரெட்டி ஆகியோரும் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரு கிராமத்தில் நடந்த பகவத் கீதை பாராயணம் பாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் கடந்த 1967ஆம் ஆண்டு முதல் முறையாக அங்குள்ள ஒரு ஆஞ்சநேயர் கோயிலில் பகவத் கீதை பாடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். அன்று முதல் இன்று வரை அந்த கிராமத்தில் பகவத் கீதை பாராயணம் பாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சுமார் 58 வருடங்களாக இதனை அந்த கிராமத்தில் இருப்பவர்கள் கடைபிடிக்கும் நிலையில் அங்கிருக்கும் ஒருவருக்கு கூட மது குடிக்கும் பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் உள்ளிட்ட எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது என்கிறார்கள்.
அந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஏராளமான மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். அதன்படி அதிகாலை 4 மணிக்கு அங்குள்ள பெரியவர்கள் எழுந்து கொள்வார்கள். அவர்கள் 4.30 மணி முதல் 6:00 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8:00 மணி வரை பெண்களும், 8 மணி முதல் 9.30 மணி வரை இளைஞர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.
இவர்களுக்கு நிகழ்ச்சியின் போது தபேலா மற்றும் ஆர்மோனியம் வாசித்தல் மற்றும் கோலாட்டம் போன்றவைகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் மொத்தம் 3000 மக்கள் வசிக்கிறார்கள். மேலும் தினசரி இப்படி செய்வதால் அந்த கிராமத்தில் வசிக்கும் ஒருவருக்கு கூட கெட்ட பழக்கமே இல்லை என்று கூறுகிறார்கள்.
