ஆண்டுக்கு ₹80 லட்சம் சம்பாதிக்கும் 36 வயதுப் பெண் ஒருவர், டேட்டிங்கின் போது ₹2,500 பில் தொகையைப் பகிரச் சொன்னதற்காக அந்த உறவையே முறித்துக் கொண்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

நளினி உனகர் என்பவர் எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள இந்தப் பதிவின்படி, அந்தப் பெண் ஒரு ஆணுடன் மூன்றாவது முறை டேட்டிங் சென்றுள்ளார். முதல் இரண்டு முறை அந்த ஆணே முழுத் தொகையையும் செலுத்திய நிலையில், மூன்றாவது முறை ₹5,000 பில்லை சரிபாதியாகப் பிரிக்க அந்த ஆண் கேட்டதுதான் இந்தப் புகையச்சலுக்குக் காரணம். “என்னால் 10 முறை பில் கட்ட முடியும், ஆனால் எனக்காகச் செலவு செய்ய அந்த ஆண் கணக்குப் பார்ப்பது எனக்குப் பிடிக்கவில்லை” என அந்தப் பெண் திருமணத் தரகரிடம் கூறி அந்த வரனை நிராகரித்துள்ளார். ₹2,500 என்ற சிறிய தொகை, ஒரு பெரிய உறவையே காவு வாங்கியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விவகாரம் இணையவாசிகளை இரு பிரிவாகப் பிரித்துள்ளது. ஒரு தரப்பினர் அந்தப் பெண்ணின் “தரம்” மற்றும் “சுயமரியாதையை” ஆதரிக்கும் அதே வேளையில், மற்றொரு தரப்பினர் இது “போலி சமத்துவம்” என்றும், 36 வயதிலும் 80 லட்சம் சம்பளம் வாங்கியும் ஒரு பில்லைப் பகிர மனமில்லாதது அற்பத்தனமானது என்றும் கடுமையாகச் விமர்சித்து வருகின்றனர்.

“>

“2026-ல் நவீன டேட்டிங் என்பது ஒரு உளவியல் போர்க்களமாக மாறிவிட்டது” என்று சில பயனர்கள் கருத்து தெரிவிக்க, “80 லட்சம் சம்பளம் இருந்தால் மட்டும் போதாது, விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் வேண்டும்” எனப் பலரும் அந்தப் பெண்ணை வறுத்தெடுத்து வருகின்றனர்.

பணம் வசதி இருந்தும், ஒரு சிறிய கணக்குப்பார்ப்பு விவகாரம் இன்று சமூக வலைதளங்களில் ‘ஆணாதிக்கம் vs பெண் சுதந்திரம்’ என்ற ரேஞ்சுக்குப் பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.