தற்போதைய டிஜிட்டல் பரிவர்த்தனை யுகத்தில், யூபிஐ மூலமான பரிவர்த்தனைகள் மிக முக்கியமானதாக மாறிவிட்டது. இதனை தொடர்ந்து, சில நாட்களாக யூபிஐ வழியாக ₹2,000க்கும் மேல் பண பரிவர்த்தனை செய்தால் ஜிஎஸ்டி (GST) கட்டணங்கள் விதிக்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர் அணில் குமார் யாதவ் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சகம் தெளிவான பதில் வழங்கியுள்ளது.

இது குறித்து பதிலளித்த மத்திய நிதி அமைச்சக இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, “ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மாற்றங்கள் அனைத்தும் ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரையின் அடிப்படையில்தான் எடுக்கப்படும். தற்போதுவரை ₹2,000க்கு மேல் யூபிஐ பரிவர்த்தனையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட வேண்டும் எனக் கூறும் எந்த பரிந்துரையும் ஜிஎஸ்டி கவுன்சிலிடம் இருந்து வரவில்லை” என்று தெரிவித்தார். மேலும், ஜிஎஸ்டி கவுன்சில் என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் அடங்கிய அமைப்பாகும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இதே நேரத்தில், கர்நாடக மாநிலத்தில் சில சிறு வியாபாரிகளுக்கு லாப கணக்கீட்டின் அடிப்படையில் ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் நடந்திருந்தது. இதனால், மாநிலத்தில் சில சிறு வியாபாரிகள் தங்கள் கடைகளில் இனி யூபிஐ வசதி வழங்கமாட்டோம் என்றும், வாடிக்கையாளர்கள் நேரடியாக பணம் செலுத்த வேண்டும் என முடிவு செய்திருந்தனர். இதுவும் இந்த புதிய தகவலுக்கு பின்னணி அளித்துள்ளது.

இந்நிலையில், ₹2,000க்கு மேல் யூபிஐ பரிவர்த்தனை செய்தால் ஜிஎஸ்டி கட்டணங்கள் வசூலிக்கப்படுவதற்கான எந்த திட்டமும் தற்போது மத்திய அரசுக்கு இல்லை என்றும், மக்களுக்கு தவறான தகவலை நம்ப வேண்டாம் என்றும் நிதி அமைச்சகம் உறுதியுடன் தெரிவித்துள்ளது. இது, மக்களிடையே நிலவிய குழப்பத்திற்கு தீர்வாக அமைந்துள்ளதாகும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.