உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ஆக்ரா – லக்னோ எக்ஸ்பிரஸ்வே சாலையில் இன்று காலை ஒரு கோர விபத்து அரங்கேறியுள்ளது. ஹோலி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக ஃபரிதாபாத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் ஒரு பிக்கப் வாகனத்தில் ஏறி ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். காலை 9:30 மணியளவில் பங்கர்மாவ் பகுதியில் வாகனம் வந்து கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வண்டி மின்னல் வேகத்தில் சாலையின் நடுவே இருந்த டிவைடரில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 வயது சிறுமி தீக்ஷா மற்றும் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் என இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

​தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்த மற்ற 12 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூலித் தொழிலாளர்களான இவர்கள், நீண்ட நாட்களுக்குப் பிறகு பண்டிகைக்காகச் சொந்த ஊருக்குச் செல்லும்போது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தின் மொத்தக் காட்சியும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கியுள்ளது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், டிரைவர் தூக்கக் கலக்கத்தில் இருந்தாரா அல்லது வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.