மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிபொருள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு, இந்தியாவில் வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனால் ஹோட்டல்களில் உணவு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இதனைச் சமாளிக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
வளைகுடா நாடுகளில் இருந்து எரிவாயு ஏற்றிய இரண்டு இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் புறப்படத் தயாராக உள்ள நிலையில், மாநிலங்களுக்கான வணிக சிலிண்டர் ஒதுக்கீட்டை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
வருகிற மார்ச் 23-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த 20 சதவீத கூடுதல் ஒதுக்கீடு, முன்னுரிமை அடிப்படையில் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் அரசு சமையல் கூடங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
எனினும், இந்தச் சலுகையைப் பெற விரும்பும் வணிக நுகர்வோர் கட்டாயம் எண்ணெய் நிறுவனங்களிடம் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பிற்கு மாறத் தயாராக இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த முன்னுரிமை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.
இதன் மூலம் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
