உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், 9-ஆம் வகுப்பு மாணவனை ஏமாற்றி நைனிடாலுக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, ஆபாச வீடியோக்களைக் காட்டி ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். லக்னோவின் தாக்கூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன், கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி மதியம் வீட்டிலிருந்து புறப்பட்டவர் மீண்டும் வரவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் தாய், தனது மகனைத் தேடி வந்துள்ளார். விசாரணையில், தனது மகனின் நண்பன் வீட்டுக்குச் சென்றபோது, அந்த நண்பனின் அண்ணி மாணவனை எங்கோ அழைத்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில், பிப்ரவரி 21-ஆம் தேதி மாணவன் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட மாணவன் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“என்னை ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண் நைனிடாலுக்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியிலேயே எனது செல்போனைப் பிடுங்கி, அதிலிருந்த சிம் கார்டை உடைத்து எறிந்துவிட்டார். நைனிடாலில் உள்ள ஒரு விடுதியில் வைத்து என்னை மிரட்டி வலுக்கட்டாயமாகப் பாலியல் உறவு கொண்டார். அப்போது எனக்குத் தெரியாமல் ஆபாச வீடியோக்களையும், புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.
நைனிடாலில் இருந்து திரும்பிய பிறகும் அந்தப் பெண் மாணவனை விடவில்லை. தான் எடுத்த ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும், குடும்பத்தினர் மீது பொய் வழக்குப் போடுவேன் என்றும் கூறி மிரட்டியுள்ளார். இந்த வீடியோக்களை அழிக்க ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று மாணவனைத் தொடர்ந்து பிளாக்மெயில் செய்துள்ளார்.
இது குறித்து ஏசிபி ராஜ்குமார் சிங் கூறுகையில், “மாணவனின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மாணவன் மீட்கப்பட்ட பிறகு, அவர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்தப் பெண்ணிடமிருந்து ஆபாச வீடியோக்கள் இருந்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும் இந்தச் சம்பவம் லக்னோ பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
