உலகப் புகழ்பெற்ற கேரளாவின் திரிச்சூர் பூரம் திருவிழாவிற்காக பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திரிச்சூரில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்குத் தேவையான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இதற்காக மண்டதிக்கூடு என்ற பகுதியில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு, அங்குள்ள ஒரு கிட்டங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
இன்று (ஏப்ரல் 21) எதிர்பாராத விதமாக அந்தப் பட்டாசு கிடங்கில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதால், அந்தப் பகுதியே கரும்புகை மண்டலமாகக் காட்சியளித்தது. கிட்டங்கிக் கட்டிடம் முழுமையாகத் தரைமட்டமான நிலையில், அங்கிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் பல மணி நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும் விபத்து நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்ட காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவிழா உற்சாகத்தில் இருந்த மக்களிடையே இந்தத் துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
