பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்த கருத்து தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பிரதமரை ‘பயங்கரவாதி’ என்று அவர் விமர்சித்ததற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தனது கருத்துக்கு கார்கே விளக்கமும் அளித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது,

அண்ணாதுரையின் உருவப்படத்தைப் பயன்படுத்தும் அதிமுகவினர், பிரதமர் மோடியுடன் எப்படி கைகோர்க்க முடியும்? அவர் ஒரு பயங்கரவாதி. அவரது கட்சியினர் சமத்துவம் மற்றும் நீதியில் நம்பிக்கை கொண்டவர்கள் கிடையாது. அத்தகையவர்களுடன் அதிமுக இணைவது என்பது ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும் செயலாகும் என்றார். கார்கே இப்படி பேசியது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கார்கேவின் இந்த கருத்துக்குப் பதிலடி கொடுத்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா கூறியதாவது, ஒசாமா பின்லேடனை ‘ஒசாமா ஜி’ என்று அழைக்கும் காங்கிரஸ் கட்சி, ஜாகிர் நாயக்கை அமைதித் தூதர் என்று கொண்டாடுகிறது. ஆனால், நாட்டின் பிரதமரை பயங்கரவாதி என்று விமர்சிக்கிறது. பிரதமரை நோக்கி அவதூறுச் சொற்களை வீசும் போதெல்லாம் நாட்டு மக்கள் காங்கிரஸிற்குப் பாடம் புகட்டியுள்ளனர். இந்த முறையும் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றார்.

மேலும் தனது பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். அதில், “பிரதமர் மோடி ஒரு பயங்கரவாதி என்று நான் ஒருபோதும் கூறவில்லை. அவர் மற்ற அரசியல் கட்சிகளையும் மக்களையும் அச்சுறுத்துகிறார் என்ற அர்த்தத்திலேயே பேசினேன். சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளைத் தன் கையில் வைத்துக்கொண்டு அவர் மிரட்டல் விடுக்கிறார் என்பதையே நான் சுட்டிக்காட்டினேன்” எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும், நாட்டின் உயரிய பதவியில் இருக்கும் பிரதமர் குறித்து இத்தகைய வார்த்தையைப் பயன்படுத்தியது நாகரிகமற்றது என பாஜக தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.