அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இன்று பிப்ரவரி 6, நடைபெறவுள்ள அணுசக்தி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஈரான் மீது கடுமையான ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை ‘ஹை அலர்ட்’ விடுத்துள்ளது. “ஈரானின் உச்ச தலைவர் கமேனி மிகவும் கவலையடைய வேண்டும்” என்று தெரிவித்துள்ள டிரம்ப், பேச்சுவார்த்தை உடன்பாட்டிற்கு வராவிட்டால் முன்னெப்போதும் இல்லாத அளவிலான மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் அதன் ஏவுகணை சோதனைகளைக் கட்டுப்படுத்த டிரம்ப் நிர்வாகம் “அதிகபட்ச அழுத்தம்” கொடுக்கும் கொள்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த 2025-ம் ஆண்டு ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு பெரிய அளவிலான தாக்குதலுக்கு டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்குப் பதிலடியாக, ஈரானும் தனது ஏவுகணைகளைத் தயார் நிலையில் வைத்துள்ளதோடு, அமெரிக்கத் தளங்களைத் தாக்கத் தயங்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளது. மஸ்கட் பேச்சுவார்த்தையின் முடிவு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நிலவுமா அல்லது போர் மூளுமா என்பதைத் தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.
