ஈரானுடன் அணுசக்தி விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்தவொரு கப்பலும் செல்வதற்கு அனுமதி இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேலும் ஈரானின் அணுசக்தி திட்டங்களைக் கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், அமெரிக்கக் கடற்படை உடனடியாக ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடும் என்றும், அங்கிருந்து வெளியேறும் அல்லது உள்ளே நுழையும் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதே இந்த கடுமையான நடவடிக்கைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த முற்றுகை குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து வைத்திருப்பதாக ஈரான் அளித்த வாக்குறுதியை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கடற்பகுதியில் கண்ணிவெடிகள் இருப்பதாகக் கூறி ஈரான் அச்சுறுத்தி வருவதால், கப்பல் போக்குவரத்து ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தகைய அபாயகரமான சூழலில் கப்பல் உரிமையாளர்கள் தங்கள் கப்பல்களை இயக்க விரும்பமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இந்தப் பேச்சுவார்த்தை தோல்விக்குப் பிறகு உடனடியாகத் நாடு திரும்பியுள்ள நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச எரிசக்தி சந்தையிலும், மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
