ஆர்சிபி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்ற ராஜஸ்தான் அணி..

2024 ஐ.பி.எல்லின் 19வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணியில் துவக்க விராட் கோலி மற்றும் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் இருவரும் அதிரடியாக விளையாடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அதன்பின் டு பிளெசிஸ் 14வது ஓவரில் அவுட் ஆனார். டு பிளெசிஸ் 33 பந்துகளில் (2 பவுண்டரி, 2சிக்ஸ்) 44 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றினார். பின் வந்த சவுரவ் சவுகான் 9 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இருப்பினும் நட்சத்திர வீரரான விராட் கோலி சிறப்பாக விளையாடினார்.

விராட் கோலி 67 பந்துகளில் தனது 8வது ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. விராட் கோலி 72 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 113 ரன்களுடனும், கேமரூன் கிரீன் 5 ரன்னிலும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து ராஜஸ்தான் அணியில் துவக்க வீரர்களாக களம் இறங்கிய ஜெய்ஸ்வால் ரீஸ் டாப்லியின் முதல் ஓவரின்  2வது பந்தில் மேக்ஸ்வெல்லியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஜாஸ் பட்லர் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் கைகோர்த்து அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி 100 ரன்களை கடந்தது

அதன்பின் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 69 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து வந்த ரியான் பராக் 4, துருவ் ஜூரல் 2 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர். ஆனாலும் மறுமுனையில் ஜோஸ் பட்லர் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடி கொண்டிருந்தார். பின் சிம்ரோன் ஹெட்மயர் – ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்து ராஜஸ்தான் அணியை வெற்றி பெற செய்தனர். ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட் இழந்து 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேமரூன் கிரீனின் கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட  முதல் பந்தில் சிக்ஸர் உடன் தனது 6வது ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார் பட்லர்.

ஹெட் மயர் அவர் பங்குக்கு 6 பந்துகளில்  11 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 100 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் (4 போட்டிகளில் 4 வெற்றி) முதலிடம் பிடித்துள்ளது. அதே நேரத்தில் ஆர்சிபி அணி தொடர்ந்து 3வது தோல்வியை பதிவு செய்துள்ளது. அந்த அணி மொத்தம் 5 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை மற்றும் பதிவு செய்து புள்ளி பட்டியல் 8வது இடத்தில் உள்ளது.. ஆர்சிபியின் தொடர் தோல்விகளால் அந்த அணியின் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.