ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் பஞ்சாப் அணி ரன் மழையில் நனைந்தாலும், அந்த அணியின் பீல்டிங் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரியான்ஷ் ஆர்யா (37 பந்துகளில் 93 ரன்கள்) மற்றும் கூப்பர் கோனோலி (46 பந்துகளில் 87 ரன்கள்) அதிரடியில் மிரட்டினர். இவர்களின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்தது பஞ்சாப். இதுவே ஐபிஎல் 2026 தொடரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
பின்னர் விளையாடிய லக்னோ அணியில் ரிஷப் பண்ட் (43), எய்டன் மார்க்ரம் (42), மிட்செல் மார்ஷ் (40) ஆகியோர் போராடியும், அந்த அணியால் 200 ரன்களை மட்டுமே எட்ட முடிந்தது. பஞ்சாப் அணி வெற்றி பெற்றாலும், அந்த அணியின் வீரர் சஷாங்க் சிங் பீல்டிங்கின் போது மூன்று முறை கேட்சுகளை தவறவிட்டு அதிர்ச்சியளித்தார்.
Shashank Singh dropped yet another catch.. oh hog what happened with him.. pressure of earlier drop 😞
Shreyas Iyer chuckled this time n Ponting stare.. tat says all 😄#PBKSvsLSG #LSGvsPBKS #PBKSvLSG #LSGvPBKS #iplonstar pic.twitter.com/Mhij8oyOFz— Cric_Lover 🏏 (@ankit_bhattar) April 19, 2026
அதாவது 14-ஆவது ஓவரில் சஹால் வீசிய பந்தில் நிக்கோலஸ் பூரன் கொடுத்த கேட்சை விரல் நுனியில் பட்டும் பிடிக்கத் தவறினார். 18-ஆவது ஓவரில் எய்டன் மார்க்ரம் அடித்த பந்தை சரியாகக் கணிக்காமல் எல்லைக்கோட்டில் கோட்டைவிட்டார். 19-ஆவது ஓவரில் முகுல் சவுத்ரி கொடுத்த கேட்சை ஓடி வந்து பிடித்தும், பந்து கையை விட்டு நழுவியது.
Shreyas Iyer and Ricky Ponting hugging Shashank Singh after the match 🫂 🔥😂 #PBKSvsLSG #IPL2026 #LSGvsPBKS pic.twitter.com/LjH0PNhgpX
— ViratKoisa Cricket (@ViratKoisaAxom) April 19, 2026
தொடர்ச்சியாக கேட்சுகள் விடப்பட்டதைக் கண்டு டக்-அவுட்டில் இருந்த பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கடும் அதிருப்தியடைந்து உறைந்து போய் நின்றார். கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தொடக்கத்தில் அதிருப்தி அடைந்தாலும், மூன்றாவது கேட்ச் விடப்பட்டபோது ஒருவித விரக்தியான புன்னகையையே வெளிப்படுத்தினார். இருப்பினும், போட்டி முடிந்ததும் சஷாங்க் சிங்கின் தவறுகளைப் பெரிதுபடுத்தாமல், பயிற்சியாளர் பாண்டிங் மற்றும் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் இருவரும் அவரை ஆரத்தழுவி சிரித்தபடி உரையாடினர். வெற்றி பெற்ற உற்சாகத்தில் சஷாங்கிற்கு அவர்கள் ஆறுதல் கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் தவறுகளைத் திருத்திக்கொண்டு அடுத்த போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் தனது பீல்டிங் தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் தோல்வியின் போது அவ்வப்போது தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய நிலையில் பும்ராவை நோக்கி கூட கத்தினார். இது போன்ற சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது தனது சொந்த அணியில் தவறு நடந்திருந்தால் கூட அவர்களை அன்பாக தட்டிக் கொடுத்து சுமூகமாக பஞ்சாப் அணி செயல்பட்டது பாராட்டுகளை பெறுகிறது.
