ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி. சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியின் துல்லியமான பந்துவீச்சும், ரிங்கு சிங்கின் அதிரடி அரைசதமும் இந்த வெற்றிக்கு வித்திட்டன.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஒரு கட்டத்தில் 8.4 ஓவர்களில் 81 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்த ராஜஸ்தான் அணியை, வருண் சக்கரவர்த்தியின் சுழல் நிலைகுலையச் செய்தது. தனது 4 ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை (வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜூரல், ரியான் பராக்) கைப்பற்றி அசத்தினார் வருண். இவருக்கு துணையாக சுனில் நரைன் 2 விக்கெட்டுகளையும், கார்த்திக் தியாகி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (15 வயது), 28 பந்துகளில் 46 ரன்கள் குவித்து அதிரடி காட்டிக் கொண்டிருந்தார். இவரை வீழ்த்த கேப்டன் அஜிங்க்ய ரஹானே, வருண் சக்கரவர்த்தியை அழைத்தார். வருண் வீசிய பந்தில் வைபவ் ஆட்டமிழந்ததும், வருண் சக்கரவர்த்தி ஆவேசமாக அவருக்கு பெவிலியன் செல்லும் வழியைக் காட்டி சைகை செய்தது மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி, 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிங்கு சிங், 34 பந்துகளில் 53* ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற பின் பேசிய வருண் சக்கரவர்த்தி ஒரு அதிர்ச்சியான தகவலைப் பகிர்ந்துகொண்டார். “இந்த சீசனின் தொடக்கத்தில் எனக்கு காயம் ஏற்பட்டது. எனது இடது கையில் இரண்டு இடங்களில் எலும்பு முறிவுகள் உள்ளன. அந்த வலியுடனேயே நான் விளையாடி வருகிறேன்,” என்று அவர் கூறினார். காயத்தையும் பொருட்படுத்தாமல் அணியின் வெற்றிக்காக அவர் போராடியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீண்டும் புள்ளிப் பட்டியலில் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது.