இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஏசி ரூம், அதிவேக இன்டர்நெட் வசதி, விலையுயர்ந்த ஆன்லைன் கிளாஸ்கள் என அனைத்து வசதிகளும் இருந்தும் படிக்க சோம்பேறித்தனம் படும் குழந்தைகளுக்கு மத்தியில், எந்தவொரு டிஜிட்டல் வசதியும் இல்லாமல் 300 வரை வாய்ப்பாடுகளைத் (Tables) விரல் நுனியில் வைத்துள்ள இரண்டு அரசுப் பள்ளி மாணவிகளின் வெற்றிக்கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலருக்கும் உத்வேகம் அளித்து வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் சாத்தாராவில் உள்ள தத்தநகர் பகுதியில், தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வீதியோரமாக மீன் வியாபாரம் செய்து வரும் ஒரு ஏழைத் தொழிலாளியின் மகள்கள்தான் இந்தச் சிறுமிகள். மாவட்ட நிர்வாகப் பள்ளியில் (Zilla Parishad School) 4 மற்றும் 5-ஆம் வகுப்பு படிக்கும் இந்த இரண்டு சுட்டிகளும், தங்களின் தந்தைக்கு வியாபாரத்தில் உதவி செய்துகொண்டே, அந்த மீன் சந்தையின் கடுமையான துர்நாற்றத்திற்கும், மக்கள் கூட்டத்தின் சத்தத்திற்கும் நடுவே ஒரு மூலையில் அமர்ந்து தினமும் விடாமுயற்சியுடன் படித்து வருகின்றனர்.

இன்றைய தலைமுறை குழந்தைகள் சாதாரண கணக்குகளுக்குக் கூட மொபைல் போன் அல்லது கால்குலேட்டரைத் தேடும் நிலையில், இந்தச் சிறுமிகள் தங்களின் கடின உழைப்பாலும், தந்தையின் கஷ்டத்தை உணர்ந்த அர்ப்பணிப்பாலும் 300 வரையிலான வாய்ப்பாடுகளைத் தங்குதடையின்றி ஒப்பித்து அசத்துகிறார்கள்.

எந்தவொரு பிரைவேட் டியூஷனும் இல்லாமல், ஒரு சிறிய அறையில் வசித்துக் கொண்டு இந்த அரசுப் பள்ளி மாணவிகள் நிகழ்த்தியுள்ள இந்த அறிவுச் சாதனை, வசதிகள் இருந்தும் சாக்குப்போக்கு சொல்லும் பலருக்கும் ஒரு பாடம் புகட்டுவது போல் அமைந்துள்ளதாக இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்துப் பாராட்டிய மருத்துவர் சந்தீப் க்ஷீர்சாகர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.