அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ், வெளிநாட்டு குடியேறிகள் மீதான அடக்குமுறைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக, குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி நடத்தி வரும் சோதனைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் மினியாபோலிஸ் நகரில் வசித்து வரும் 5 வயது சிறுவன் லியாம் கோனேஜோ ராமோஸ், பள்ளி முடிந்து தனது தந்தையுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். அப்போது அவர்களை வழிமறித்த ICE அதிகாரிகள், இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவனை ஒரு கருவியாகப் (பகடை) பயன்படுத்தி, வீட்டில் இருந்த அவனது தாயையும் வெளியே வரவழைக்க அதிகாரிகள் முயன்றனர். ஆனால், சிறுவனின் தந்தை தனது மனைவியை எச்சரித்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. தற்போது தந்தையும் சிறுவனும் டெக்சாஸில் உள்ள தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவனின் குடும்பத்தினர் முறையான ஆவணங்களின்றி தங்கியிருப்பதாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், அவர்களின் வழக்கறிஞர் மார்க் ப்ரோகோஷ் இது குறித்துக் கூறுகையில், “லியாமின் குடும்பம் கடந்த 2024-ம் ஆண்டே அமெரிக்காவிற்கு வந்து முறைப்படி புகலிடம் (Asylum) கோரி விண்ணப்பித்துள்ளது. விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும் நிலையில் இந்த கைது நடவடிக்கை சட்டவிரோதமானது” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 7-ஆம் தேதி, காரை விட்டு இறங்க மறுத்ததாக ரெனி நிக்கோல் குட் (37) என்ற பெண் ICE அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இன்னும் ஆறாத வடுவாக உள்ளது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், ஸ்பைடர்மேன் பை அணிந்தபடி பயத்தில் உறைந்து நிற்கும் 5 வயது சிறுவனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உலகையே உலுக்கியுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு அமெரிக்க முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “5 வயது சிறுவனைத் தடுப்புக் காவலில் வைத்திருப்பது மனிதநேயமற்ற செயல்; இது எல்லை மீறிய நடவடிக்கை” என அவர் சாடியுள்ளார். லியாம் தவிர, மேலும் மூன்று சிறுவர்களும் இதேபோல் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளி நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.