உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில், 35 வயது தாயை அவரது 17 வயது மூத்த மகன் கோபத்தில் கழுத்தை நெரித்து கொன்றுள்ளான். ராவத்பூர் காவல் நிலைய எல்லையில் உள்ள குப்தா காலனியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், தாயார் ஸ்பீக்கரை உடைத்ததையடுத்து ஏற்பட்ட கோபத்தில், மகன் தாயாரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்ததாக கூறியுள்ளார். இதில் அவரது தாயார் மரணம் அடைந்த நிலையில் பின்னர் அவரது சடலத்தை சோபா அடியில் மறைத்து வைத்துள்ளார். இந்த தகவலை அவரது 15 வயது இளைய சகோதரன் பள்ளியில் இருந்து வந்ததும் போலீசாரிடம் தெரிவித்தார். உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்தனர்.

சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில், 17 வயது மாணவன் தனது செயலுக்கு மிகுந்த வருத்தம் தெரிவித்ததாகவும், “நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன்… அம்மாவை கோபத்தில் கொன்றேன்” என்று கதறி அழுததாக போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையில், தாயார் உடலில் காயங்கள் மற்றும் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் பின்னணி விசாரணையில், அந்த சிறுவனின் தாயார் ஒரு இளைஞனுடன் 16 ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் இருந்ததும், அந்த இளைஞன் சம்பவத்தன்று வீட்டில் இல்லாததும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் அந்தப் பெண்ணின் கணவன் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில் அந்த பெண் தான் தன் இரு மகன்களையும் வேலை பார்த்து வளர்த்து வந்துள்ளார். மேலும், தாய் தனது மகனை போதை பழக்கம் மற்றும் சத்தம் அதிகமாகப் பாடல்களைக் கேட்பது போன்ற பழக்கங்களை விட்டுவிடுமாறு எச்சரித்தது காரணமாக தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.