திருச்செங்கோட்டில் நடைபெற்ற பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு கூட்டத்தில் பேசிய முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். “ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் நான்தான் லயன்” என்று கூறிக்கொள்ளும் முதல்வர், உண்மையில் ஒரு ‘லயர்’ (பொய்யர்) என்றும், அவர் வரிசையில் நின்று பொய் சொல்லி வருவதாகவும் சாடினார்.
மேலும், மத்திய அரசு தமிழக உரிமைகளை பறிப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை முதல்வர் உருவாக்கி வருவதாகவும், இரட்டை எஞ்சின் ஆட்சி இருந்தால் மட்டுமே தமிழகம் வளர்ச்சி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகார்கள் ஆதாரத்துடன் இருப்பதால் அதனை பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்ல முடியாது எனத் தெரிவித்த தமிழிசை, திமுக ஆட்சியில் ஒவ்வொருவர் மீதும் கடன் சுமை அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
திமுகவின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர்கள் ‘கதாநாயகி’ என்று வர்ணிக்கும் நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களையும் அரவணைக்கும் ஒரு ‘அம்மா’வைப் போல இருக்கும் என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
