அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான பி. தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
“கட்சிக்காகப் பல தசாப்தங்களாக உழைத்த எனது தந்தை தனபாலுக்கு அதிமுகவில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை; சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது கூட கட்சியின் மேலிடத்திலிருந்து யாரும் நேரில் வந்தோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ நலம் விசாரிக்கவில்லை” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
தற்போது ஒரு சில நபர்களின் பிடியில் சிக்கியுள்ள அதிமுகவில் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும், உழைப்பிற்கு மதிப்பில்லை என்றும் குற்றம் சாட்டிய அவர், விஜய்யின் நேர்மையான அரசியலால் ஈர்க்கப்பட்டே இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டார்.
2024 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட லோகேஷின் இந்த வெளியேற்றம், கொங்கு மண்டல அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
