தெலுங்கானா மாநிலம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில், வாலிபர் ஒருவர் தான் ஆர்டர் செய்த தோசையில் திட்டமிட்டுத் தனது சொந்த தலைமுடியைப் போட்டு ரகளையில் ஈடுபட்ட விசித்திரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹோட்டலுக்கு வந்த அந்த நபர், தோசை பரிமாறப்பட்டவுடன், ரகசியமாகத் தனது தலையிலிருந்து முடியைப் பிடுங்கி உணவில் போட்டுள்ளார். பின்னர், “தோசையில் முடி இருக்கிறது, ஹோட்டல் தூய்மையாக இல்லை” எனக் கூறி ஊழியர்களிடம் கத்தி கூச்சலிட்டுப் பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அதோடு நிற்காமல், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் உடனடியாகப் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள், தோசையில் முடி இருந்ததை உறுதி செய்து, ஹோட்டல் நிர்வாகத்திற்கு ரூ. 2,000 அபராதமும் விதித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஹோட்டல் மேலாளர், தங்களது ஹோட்டலை எப்போதும் தூய்மையாகவே பராமரித்து வருவதாகவும், தவறு எங்கு நடந்தது என்பதை அறிய கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் கோரினார்.
அதன்படி, ஹோட்டலில் இருந்த சிசிடிவி பதிவுகளை அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு செய்தபோதுதான் உண்மையான கதை வெளிச்சத்திற்கு வந்தது. அந்த வாலிபர் வேண்டுமென்றே தனது தலைமுடியைப் பிடுங்கி தோசையில் போடும் காட்சிகள் அதில் மிகத் தெளிவாகப் பதிவாகியிருந்தன. சிசிடிவி காட்சிகள் பரிசோதிக்கப்படுவதை உணர்ந்த அந்த மர்ம வாலிபர், அதற்குள் அங்கிருந்து நைசாகத் தப்பியோடிவிட்டார். உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளை ஏமாற்றி ஹோட்டலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
