ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதய்பூர்வாதி பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் குமார் (37). மருத்துவரான இவர், தனது குடும்பத்துடன் ஆதர்ஷ் நகர் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், வழக்கம்போல் நேற்று காலையில் மருத்துவமனை பணி முடிந்து தனது காரில் அவர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். வீட்டின் வாசலில் காரை நிறுத்திய அவர், நீண்ட நேரமாகியும் வாகனத்தை விட்டு கீழே இறங்காமல் காருக்குள்ளேயே அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

நெடுநேரமாக கார் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், அருகே சென்று பார்த்தபோது சந்தீப் குமார் காருக்குள் அசைவற்ற நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக அவரது குடும்பத்தினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மருத்துவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர் சந்தீப் குமாரின் மரணத்திற்கான காரணம் என்ன, இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.