ஐயாதஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே நடந்த தற்கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயதுடைய வாலிபர். இவர் மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு மாணவராக படித்து வந்தார். தீபாவளி விடுமுறை காரணமாக சமீபத்தில் ஊருக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியேறிய அவர், நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
அடுத்து, நேற்று முன்தினம் காலை மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அவர் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதையடுத்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
பள்ளி சுவரில் “என் சாவுக்கு காரணம் பாபு” என்று மாணவர் எழுதி வைத்திருப்பதும் போலீசாருக்கு அதிர்ச்சியளித்தது. இதையடுத்து “பாபு” என குறிப்பிடப்பட்டவர் யார் என்பதை விசாரித்ததில், அவர் அப்பள்ளியில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர் என்பது தெரியவந்தது.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இறந்த மாணவர், பள்ளியில் படித்த காலத்திலிருந்து ஆசிரியர் பாபுவுடன் ஓரினச்சேர்க்கை காரணமாக நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், சமீபகாலமாக பாபுவுக்கு தொந்தரவு அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர், அந்த பழக்கத்தை நிறுத்துமாறு மாணவரை எச்சரித்து, அவரது எண்ணையும் ‘பிளாக்’ செய்துள்ளார்.
மேலும், மாணவரின் நடத்தை குறித்து பாபு, அவரது பெற்றோர் மற்றும் அண்ணனிடம் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்ததாகவும், அதனைத் தொடர்ந்து குடும்பம், இனிமேல் பிரச்சனை ஏற்படாது என உறுதியளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்தன்று, மாணவரை அண்ணன் கண்டித்து, கல்லூரிக்குச் செல்ல பஸ் நிறுத்தத்தில் இறக்கி விட்டதாகவும், அதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. தற்கொலைக்கு முன்னதாக ஆசிரியர் பாபு பற்றி சுவரில் எழுதி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவரின் அண்ணன் அளித்த புகாரின் பேரில், சேதுபாவாசத்திரம் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக ஆங்கில ஆசிரியர் பாபுவை (40) கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
