போலீஸ் விசாரணையின்படி, சிறுமிகளின் தாய் கட்டுமானத் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். பள்ளி விடுமுறையின்போது அவரைச் சந்திப்பதற்காக இரு சிறுமிகளும் சூரத்துக்கு வந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் தாய் வேலைக்குச் சென்றிருந்தபோது, அவருக்கு அறிமுகமான கட்டுமானப் பணியாளர் ஒருவர் வீட்டுக்கு வந்ததாகவும், வெவ்வேறு நாள்களில் சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை வெளியில் தெரிவிக்கக் கூடாது என சிறுமிகளை அவர் மிரட்டியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். விடுமுறை முடிந்ததும் இரு சிறுமிகளும் மீண்டும் தங்களது பள்ளிக்குத் திரும்பியுள்ளனர்.
இதனிடையே, ஆகஸ்ட் 25-ஆம் தேதி பள்ளியில் ‘நல்ல தொடுதல், தவறான தொடுதல்’ தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது இளைய சிறுமி, தனக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து பெண் அதிகாரியிடம் தெரிவித்ததுடன், உடல்நலக் குறைவு இருப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் அவரது தாயாருக்குத் தகவல் அளித்துள்ளனர். நந்துர்பாருக்கு வந்த தாய், மகளிடம் தனியாகப் பேசியபோது சம்பவம் குறித்து அறிந்ததாகவும், பின்னர் மூத்த மகளிடமும் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. மூத்த சிறுமியும் இதுதொடர்பான புகாரை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீஸார் முதற்கட்டமாக பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் சூரத் உந்த்னா காவல் நிலையத்துக்கு வழக்கை மாற்றியுள்ளனர். புகாரின் அடிப்படையில் 56 வயதுடைய கட்டுமானப் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பாரதிய நியாயச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இரு சிறுமிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கைக்காக போலீஸார் காத்திருக்கின்றனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
