உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டம், கைரிகாட் காவல் எல்லைக்குட்பட்ட தாலியா கிராமத்துப் பாதை அது. வேகமாகக் கடந்து சென்ற அடையாளம் தெரியாத ஏதோ ஒரு வாகனம் மோதியதில், 55 வயதான காயத்ரி தேவி என்ற பெண்மணி சாலையில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு கிடந்தார்.

அவரது உயிர்க்காற்று மெல்ல விலகிக் கொண்டிருந்த அந்த ஆபத்தான தருணத்தில், அவ்வழியாகச் சென்ற கைரிகாட் காவல் நிலைய அதிகாரி பிரதீப் குமார் சிங் அங்கு வந்தார். காயம்பட்டுக் கிடந்த அந்தப் பெண்ணைக் கண்டதும், தாமதிக்காமல் தன் கரங்களில் தூக்கிக்கொண்டு, சிகிச்சைக்காக அருகிலிருந்த மருத்துவர் சிவசரன் சிங்கின் மருத்துவமனையை நோக்கி ஓடினார்.

ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்ற ஓர் அதிகாரி ஓடிய இந்தச் சம்பவம், கேட்கும் எவரின் இதயத்தையும் நெகிழ வைக்கும் ஒரு உன்னதமான மனிதாபிமானச் செயல் போலத்தான் முதலில் தோன்றியது!

வீடியோவில் சிக்கிய கார்…

ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான அடுத்த சில நிமிடங்களில், மக்களின் நெகிழ்ச்சி உணர்வு மாபெரும் கேள்வியாகவும் கொந்தளிப்பாகவும் மாறியது!

அந்த வீடியோவில், ஆய்வாளர் பிரதீப் குமார் சிங் காயமடைந்த பெண்ணைத் தன் கைகளில் ஏந்தியபடி நடந்து செல்ல, அவருக்குப் பின்னாலேயே காவல்துறையின் அதிநவீன ரோந்து கார் ஒன்று மெதுவாகப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது!

வீடியோவைப் பார்த்த மக்கள் இணையத்தில் கொதித்து எழுந்தனர்! “பின்னாலேயே காவல்துறை கார் வரும்போது, அந்தப் பெண்ணைக் காரில் ஏற்றி விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், கைகளில் தூக்கிக்கொண்டு நடப்பது என்ன மாதிரியான நாடகம்?” என்று காட்டமாகக் கேள்விகளை எழுப்பினர். “இது உண்மையான உதவியா அல்லது சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ (Reels) செய்து விளம்பரம் தேடும் மலிவான விளம்பர உத்தியா?” என்று பயனர்கள் சரமாரியாகக் குற்றம் சாட்டினர்.

“>

ஒரு பயனர், “காரில் ஏற்றிச் செல்ல உங்களுக்கு என்ன வெட்கமா?” என்று கேட்டிருந்தார். மற்றொருவரோ, “அவர்  தூக்கிக் கொண்டு மெதுவாக நடப்பதை விட, காரில் ஏற்றியிருந்தால் இன்னும் சில நிமிடங்கள் முன்னதாகவே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை அளித்திருக்கலாமே!” என்று நியாயமான சந்தேகத்தை முன்வைத்தார்.

உயிருக்குப் போராடும் ஒரு மனிதனின் ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பற்றது. அந்த ஆபத்தான நேரத்தில், காரைப் பயன்படுத்தாமல் மடியில் தூக்கிச் செல்வது மனிதாபிமானத்தின் உச்சமா? அல்லது தங்களை ஒரு கதாநாயகனாகக் காட்டிக் கொள்ளும் விளம்பர மோகமா? என்ற விவாதம் நாடு முழுவதும் காட்டுத்தீயாகப் பரவியது.

இருப்பினும், காயத்ரி தேவி உடனடியாக மருத்துவரிடம் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை தொடங்கப்பட்டது என்றும், அவர் மீது மோதிய வாகனத்தைத் தேடி வருவதாகவும் காவலத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு எளிய பெண்ணிற்கு உதவி செய்த அதிகாரியின் செயல் பாராட்டத்தக்கது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதே நேரத்தில் மனிதாபிமானம் என்பது கேமரா விளம்பரங்களுக்கும், கைதட்டல்களுக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

ஆபத்தில் இருக்கும் ஒரு உயிரைக் காப்பாற்ற அதிவேகமாகச் செயல்படுவதே உண்மையான அறம். கார் இருந்தும் மடியில் தூக்கிச் சென்று தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் இந்த நவீனக் கலாச்சாரம், மனிதாபிமானத்தின் தூய்மையையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. உதவி செய்வது கடமை; அதை ரீல்ஸ் ஆக்குவது நவீன மனநோய் என்பதை இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்தியிருக்கிறது!