தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், உடல் எடையை அதிகரிக்கச் சொல்லி கணவர் வற்புறுத்தியதால் மனைவி வீட்டை விட்டு வெளியேறிய விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. குக்கட்பள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில், மனைவி ஒல்லியாக இருப்பது அவரது கணவருக்குப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் சமூக வலைதளங்களில் உடல் எடை கூடுவதற்கான வழிமுறைகளைத் தேடிய கணவர், தயிர் சாப்பிட்டால் உடல் பருமன் கூடும் என்பதை அறிந்து, தனது மனைவியை தினமும் தயிர் சாப்பிடுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இருப்பினும், அந்தப் பெண்ணிற்கு பால் மற்றும் தயிர் போன்ற பொருட்கள் சுத்தமாகப் பிடிக்காது என்பதால், இது தொடர்பாக தம்பதிக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கணவர் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் அவரது மனைவி திடீரென மாயமானார்.
இதனால் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். “தயிர் சாப்பிடச் சொன்னதற்காக மனைவி கோபித்துக்கொண்டு ஓடிவிட்டார்” என கணவர் போலீசாரிடம் கதறிய சம்பவம் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணைத் தேடி வருகின்றனர்.
