சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ஒரு சில தொகுதிகளில் விசிகவினர் தேர்தல் பணியாற்றவில்லை” என்று ஓப்பனாகப் பேசியுள்ள அவர், கட்சிப் பணிகளில் சுணக்கம் காட்டியவர்கள் மற்றும் ஒற்றுமையின்றி செயல்பட்டவர்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேட்பாளர் தேர்வு குறித்து நிலவும் சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த அவர், புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக இருந்ததால்தான், தற்போதைய 3 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் வழங்க முடியாமல் போனதே தவிர, சமூக வலைதளங்களில் பரவும் மற்ற காரணங்கள் எதுவும் உண்மை கிடையாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், 2001-ல் வேட்பாளர்களைத் தேடிப் பிடித்து நிறுத்திய நிலை மாறி, இன்று ஒரு தொகுதிக்கு 10 பேர் எனப் போட்டி அதிகரித்திருப்பது கட்சியின் வளர்ச்சியைத் காட்டுவதாகக் குறிப்பிட்ட திருமாவளவன், தான் தேர்தலில் போட்டியிடும் முடிவை அறிவித்தபோது கட்சியின் முக்கிய நிர்வாகிகளே அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்து ஒரு புதிய ட்விஸ்ட்டையும் வைத்துள்ளார்.

“திமுக கூட்டணியில் நாங்கள் இப்போதும் உறுதியாகவே இருக்கிறோம்” என்று கூட்டணியைப் பற்றிப் பேசும் வாய்களுக்குப் பூட்டுப் போட்டுள்ள அவர், அதிருப்தியில் இருந்தவர்களையும், ஏமாற்றம் அடைந்தவர்களையும் அரவணைத்துச் செல்லும் வகையில் தனது உரையைப் பதிவு செய்துள்ளார். ஒருபுறம் நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்தாலும், தேர்தல் வேலையில் கோட்டை விட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை இருக்கும் என்பதையும் திருமாவளவன் தனது பாணியில் சுட்டிக்காட்டியுள்ளார்.