வெள்ள நிவாரண நிதியை ரொக்கமாக வழங்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் பெருமழை வெள்ளம் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை ரூ 6,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இந்த தொகை ரொக்கமாக வழங்கப்படும் என்றும், நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த புயல் மழையில் சிக்கி பலரது முக்கிய ஆவணங்கள் சேதமடைந்துள்ளது. குறிப்பாக வங்கி கணக்கு இல்லாதவர்கள் இருக்கிறார்கள்..

வெளியூரில் இருந்து சென்னையில் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். எனவே இவர்களை கருத்தில் கொண்டு  ரொக்கமாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த நடைமுறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் ராணுவ வீரர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். ராமதாஸ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரண நிதி வழங்ம் அரசின் நடவடிக்கை பாராட்டக் கூடியது தான். அதை ரேஷன் கடை மூலமாக வழங்கும்போது அதிகளவில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது.

உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி சென்றடையாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக தனது அச்சத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு, மாநில அரசு பல்வேறு திட்டங்களுக்கு வங்கி கணக்கு மூலமாக நிவாரணம் மற்றும் மானியம் வழங்கி வரும் நிலையில், அதே நடைமுறையை பின்பற்றி இந்த நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கையாக வைத்துள்ளார். ஓரிரு நாட்களில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முன்பு பொது நல வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறப்படுகிறது.